இலங்கையில் கடந்த ஒரு வருடத்தில் இளைஞர் வேலையின்மை விகிதம் கணிசமாகக் குறைந்துள்ளதாக இளைஞர் விவகார பிரதி அமைச்சர் தினிந்து சமன் ஹேன்னாயக்க தெரிவித்துள்ளார்.
சுற்றுலா மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளின் வளர்ச்சியுடனும், தனியார் துறையுடன் அரசாங்கம் இணைந்து மேற்கொண்ட வேலைவாய்ப்பு உருவாக்கும் நடவடிக்கைகளின் மூலமும் இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

திவுலப்பிட்டியவில் அமைந்துள்ள தேசிய இளைஞர் படையணி பயிற்சி மையத்தில் நடைபெற்ற ‘இளைஞர் உத்வேக விளையாட்டு விழா 2026’ இறுதிப்போட்டி மற்றும் பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.
நாட்டின் இளைஞர்களுக்கு பாதுகாப்பானதும், வளமானதுமான எதிர்காலத்தை உருவாக்குவதே தற்போதைய அரசாங்கத்தின் முக்கிய இலக்காகும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
இளைஞர்கள் போதைப்பொருள் பழக்கங்களுக்கு அடிமையாகாமல் தடுக்கவும், அவர்களை பொறுப்புள்ள குடிமக்களாக உருவாக்கவும் தலைமைத்துவப் பயிற்சி திட்டங்கள் விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும், ஒழுக்கநெறி, மனித விழுமியங்கள் மற்றும் சமூகப் பொறுப்புணர்வை வளர்க்கும் நோக்கில் விளையாட்டு மற்றும் கலைத்துறை சார்ந்த செயற்பாடுகள் நாடு முழுவதும் ஊக்குவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
அத்துடன், இலங்கை இளைஞர்களின் திறமைகளை சர்வதேச அரங்கிற்கு கொண்டு செல்லும் வகையில் இரண்டு புதிய தேசிய திட்டங்கள் விரைவில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும் பிரதி அமைச்சர் தினிந்து சமன் ஹேன்னாயக்க அறிவித்தார்.
