வரி செலுத்துவோர் அடையாள எண் (TIN) தமக்கு வழங்கப்பட்டுள்ளதா என்பதை இலங்கை உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் இணையதளத்தின் மூலம் எளிதாக சரிபார்க்க முடியும் என பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் நிஷாந்த ஜயவீர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கருத்து வெளியிட்ட அவர், உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று தேசிய அடையாள அட்டை (NIC) எண்ணை உள்ளிடுவதன் மூலம் TIN இலக்கம் வழங்கப்பட்டுள்ளதா என்பதை மக்கள் அறிந்துகொள்ள முடியும் என்றார்.
இதுவரை 12 மில்லியனுக்கும் அதிகமானோருக்கு வரி செலுத்துவோர் அடையாள எண்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், மேலும் சுமார் 5 மில்லியன் பேர் TIN இலக்கத்தைப் பெறுவதற்காக காத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
அதேவேளை, உரிய நபர்களுக்கு தபால் மூலம் TIN இலக்கங்களை அனுப்புவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, பலருக்கு தங்களுக்கான வரி செலுத்துவோர் அடையாள எண் வழங்கப்பட்டுள்ளதா என்பது தெரியாமல் உள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
எனவே, தேவையற்ற குழப்பங்களைத் தவிர்க்க அனைவரும் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் இணையதளத்தின் மூலம் தங்களது TIN நிலையை சரிபார்த்துக்கொள்ளுமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.
