அன்டிகுவா மற்றும் பார்புடாவின் நோர்த் சவுண்டில் நடைபெற்ற இலங்கை–மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், நிர்ணயிக்கப்பட்ட நேரத்துக்குள் ஓவர்களை பூர்த்தி செய்யத் தவறியதற்காக மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC) தண்டனை விதித்துள்ளது.

இதன்படி, மேற்கிந்தியத் தீவுகள் வீரர்களின் போட்டி ஊதியத்தில் 10 சதவீத அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன், ஐசிசி உலக டெஸ்ட் செம்பியன்ஷிப் தொடரில் அந்த அணியின் மொத்தப் புள்ளிகளில் இருந்து 2 புள்ளிகள் கழிக்கப்பட்டுள்ளன.
இந்தத் தண்டனையை ஐசிசியின் எலைட் பேனல் போட்டி மத்தியஸ்தர் ஜவகல் ஸ்ரீநாத் விதித்துள்ளார்.
அனுமதிக்கப்பட்ட நேரத்தை கருத்தில் கொண்ட பின்னரும், மேற்கிந்தியத் தீவுகள் அணி நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட இரண்டு ஓவர்கள் பின்தங்கியிருந்தது உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐசிசி நடத்தை விதிகளின்படி, ஒவ்வொரு ஓவர் பின்தங்கியதற்கும் 5 சதவீத போட்டி ஊதிய அபராதமும், ஒரு உலக டெஸ்ட் செம்பியன்ஷிப் புள்ளியும் குறைக்கப்படும்.
மேற்கிந்தியத் தீவுகள் அணித்தலைவர் ரோஸ்டன் சேஸ் குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டதால், மேலதிக விசாரணையின்றி தண்டனை உறுதி செய்யப்பட்டது.
இந்த குற்றச்சாட்டை கள நடுவர்களான போல் ரீஃபல், அஹ்சான் ராசா, மூன்றாவது நடுவர் மற்றும் நான்காவது நடுவர் ஆகியோர் பதிவு செய்திருந்தனர்.
