
இலங்கையின் நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற கடுமையான வன்முறைச் சம்பவங்களையும், அதனைத் தொடர்ந்து பிற சிறைச்சாலைகளில் கைதிகள் மீது சிறைக்காவலர்களால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் பழிவாங்கும் தாக்குதல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளையும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அலுவலகம் ஆழ்ந்த கவலையுடனும் அதிர்ச்சியுடனும் கவனித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் அலுவலகத்தின் ஊடகப் பேச்சாளர் ரவினா ஷாம்தாசனி வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ அறிக்கையில், இந்த வன்முறைச் சம்பவங்களில் உயிரிழந்த மற்றும் காயமடைந்த கைதிகள், சிறைச்சாலை அதிகாரிகள் உள்ளிட்டோரின் குடும்பத்தினர் உண்மையை அறியும் உரிமை கொண்டவர்கள் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், சம்பவங்கள் குறித்து சுயாதீனமான, வெளிப்படையான மற்றும் முழுமையான விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும், குற்றச்செயல்களுக்கு காரணமானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு பொறுப்புக்கூறல் உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் ஐ.நா. மனித உரிமைகள் அலுவலகம் வலியுறுத்தியுள்ளது.
