சித்திரவதைகளைத் தடுப்பதற்கான ஐக்கிய நாடுகள் உபகுழுவின் (SPT) பிரதிநிதிகள், வெலிக்கடை சிறைச்சாலைக்கு இன்று (16) அல்லது நாளை (17) களவிஜயம் மேற்கொள்ளவுள்ளதாக நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடளாவிய ரீதியில் கண்காணிப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து, தடுத்துவைக்கப்பட்டுள்ள நபர்களின் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் உறுதிப்படுத்தப்படுகிறதா என்பதை மதிப்பீடு செய்வதற்காக இந்த பிரதிநிதிகள் குழு திங்கட்கிழமை (15) இலங்கையை வந்தடைந்துள்ளது.

சுமார் ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்தக் குழுவில், சித்திரவதைகளைத் தடுப்பதற்கான ஐ.நா. உபகுழுவின் தலைவர் ஆயிஷா ஷுஜுனே முகம்மது தலைமையில் ஜாகுப் ஜுலியன் செபெக், நிக்கா க்வாராட்ஸ்கெலிகா மற்றும் அனிகா டோம்சிக் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். அவர்கள் எதிர்வரும் 24ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருந்து பல்வேறு ஆய்வு நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளனர்.
2019ஆம் ஆண்டு இலங்கைக்கு மேற்கொண்ட விஜயத்திற்குப் பின்னர், சித்திரவதைகளைத் தடுக்கும் நோக்கில் தேசிய தடுப்புப் பொறிமுறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள ஆயிஷா ஷுஜுனே முகம்மது, அது முக்கிய முன்னேற்றமாக அமைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும், தற்போதைய விஜயத்தின் நோக்கம் தேசிய தடுப்புப் பொறிமுறையின் செயற்திறனை மதிப்பிடுவதோடு, கடந்த காலங்களில் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன என்பதை ஆராய்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இலங்கை அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் தேசிய தடுப்புப் பொறிமுறையுடன் இணைந்து பணியாற்றுவதற்கும், கூட்டாக களவிஜயங்களை மேற்கொள்வதற்கும் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சித்திரவதைக்கு எதிரான பிரகடனத்தின் தெரிவுசெய்யப்பட்ட நெறிமுறையை இலங்கை 2017ஆம் ஆண்டு ஏற்றுக்கொண்டதன் அடிப்படையில், இந்த உபகுழுவின் பிரதிநிதிகளுக்கு முன்னறிவிப்புடன் அல்லது அவசியமான சந்தர்ப்பங்களில் முன்னறிவிப்பின்றி தடுத்துவைக்கப்பட்டோர் தங்கவைக்கப்படும் இடங்களைப் பார்வையிடும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, தேசிய பொலிஸ் ஆணைக்குழு, தேசிய சித்திரவதைத் தடுப்புப் பொறிமுறை உள்ளிட்ட அமைப்புகளின் பிரதிநிதிகளுடனும், சிவில் சமூக செயற்பாட்டாளர்களுடனும் கலந்துரையாடல்களை நடத்தவுள்ள இக்குழு, சிறைச்சாலைகள் மற்றும் தடுப்புக்காவல் நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கும் களவிஜயங்களை மேற்கொள்ளவுள்ளது.
அதன் ஒரு பகுதியாக வெலிக்கடை சிறைச்சாலைக்கு இன்று அல்லது நாளை அவர்கள் விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
