2026 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தர (A/L) பரீட்சையை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளமை, இரண்டாம் மற்றும் மூன்றாம் தடவையாக பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு அநீதியை ஏற்படுத்துவதாக பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

கொழும்பில் திங்கட்கிழமை (15) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், பரீட்சைத் திகதியை அரசாங்கம் மறுபரிசீலனை செய்து பிற்போட வேண்டும் என்றும், இல்லையெனில் உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் வழக்கு தாக்கல் செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என்றும் எச்சரித்தார்.
2025 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் கடந்த மார்ச் 31ஆம் திகதி வெளியிடப்பட்ட நிலையில், மீண்டும் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு தயாராகுவதற்காக 133 நாட்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
கடந்த ஆண்டுகளில் பெறுபேறுகள் வெளியான பின்னர் 178 முதல் 198 நாட்கள் வரை கால அவகாசம் வழங்கப்பட்டதாகவும், இம்முறை அது குறிப்பிடத்தக்க அளவில் குறைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
மேலும், முதன்முறையாக பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கும் போதுமான காலம் வழங்கப்படவில்லை எனக் குறிப்பிட்ட அவர், கடந்த காலங்களில் 28 முதல் 32 மாதங்கள் வரை கல்விக் காலம் கிடைத்த நிலையில், இம்முறை 21 மாதங்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அனைவருக்கும் சம உரிமையும் சம அந்தஸ்தும் வழங்கப்பட வேண்டும் என அரசியலமைப்பின் 12(1)ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், தற்போதைய பரீட்சைத் திகதி அறிவிப்பு மாணவர்களிடையே சமத்துவமின்மையை உருவாக்குவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
மாணவர்களுக்கு போதுமான கால அவகாசம் வழங்கப்படாவிட்டால், அது அடிப்படை உரிமை மீறலாக கருதப்படக்கூடும் என்றும், இதனால் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு செல்லும் வாய்ப்பு இருப்பதாகவும் உதய கம்மன்பில தெரிவித்தார்.
மேலும், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆட்சிக் காலத்தில் இதேபோன்ற பிரச்சினை எழுந்தபோது, கல்வி அமைச்சு பரீட்சைத் திகதியை மாற்றியமைத்ததாகவும் அவர் நினைவூட்டினார்.
எனவே, 2026 உயர்தரப் பரீட்சைத் திகதியை மீளாய்வு செய்து மாணவர்களுக்கு நியாயமான கால அவகாசம் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
