நாட்டின் பல்வேறு பகுதிகளில் நேற்று (15) இடம்பெற்ற விபத்துகளில் மூவர் உயிரிழந்துள்ளதுடன், இரு சிறுவர்கள் உட்பட நால்வர் காயமடைந்துள்ளனர்.

அவற்றில் ஒன்றாக, மாத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாத்தளை – வெஹிகல வீதியின் கடுவெல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சேற்றில் சிக்கியிருந்த லொறி ஒன்றை ட்ராக் ரக வாகனத்தின் உதவியுடன் மீட்டு வீதிக்கு எடுப்பதற்காக, வீதியின் குறுக்கே பாதுகாப்பற்ற முறையில் கேபிள் கம்பி ஒன்று இழுக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், வெஹிகல பகுதியிலிருந்து கடுவெல நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று அந்த கேபிளில் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்றவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
மேலும், மோட்டார் சைக்கிளின் பின்னால் பயணித்த அவரது 14 வயதுடைய இரண்டு பிள்ளைகள் காயமடைந்த நிலையில் மாத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மாத்தளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
