நவம்பர் மாதம் நடைபெறவுள்ள இடைக்காலத் தேர்தலில் குடியரசுக் கட்சியினர் வெற்றி பெற்றால், அமெரிக்காவின் சிரேஷ்ட பிரஜைகளுக்கு தலா 5,000 அமெரிக்க டொலர்கள் வழங்கப்படும் என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ட்ரம்பின் இந்த அறிவிப்பு அமெரிக்காவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், அதன் சட்டபூர்வத்தன்மை மற்றும் நிதி ஏற்பாடுகள் தொடர்பிலும் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.

வாக்காளர்களின் முடிவை நேரடியாகப் பாதிக்கும் வகையில் பணம் வழங்குவது அமெரிக்க சட்டத்தின் கீழ் சட்டவிரோதமாகக் கருதப்படலாம். எனினும், குறித்த திட்டம் நேரடி பணப் பரிசாக அல்லாமல் வரிக்குறைப்பு நடவடிக்கையாக அமுல்படுத்தப்பட்டால் அது சட்டபூர்வமாக இருக்கக்கூடும் என சில சட்ட நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அதேவேளை, இது மிகவும் வெளிப்படையான அரசியல் மற்றும் வர்த்தக ரீதியிலான ஒப்பந்தத்தைப் போன்றதாக இருப்பதாக சில நிபுணர்கள் விமர்சித்துள்ளனர்.
அமெரிக்காவில் சுமார் 270 மில்லியன் வயது வந்தவர்கள் உள்ள நிலையில், இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு சுமார் 1.3 ட்ரில்லியன் டொலர் தேவைப்படலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், இந்தப் பாரிய தொகையை எவ்வாறு திரட்டுவது என்பது தொடர்பில் ட்ரம்ப் இதுவரை தெளிவான விளக்கத்தை வழங்கவில்லை. சுங்கவரி மூலம் கிடைக்கும் வருவாயைக் கொண்டு இதனை ஈடுசெய்ய முடியும் என துணை ஜனாதிபதி ஜே.டி. வன்ஸ் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், தற்போதைய சுங்கவரி வருவாய் இந்தத் திட்டத்துக்குத் தேவையான தொகையைவிட கணிசமாகக் குறைவாக இருப்பதாக சுட்டிக்காட்டப்படுகிறது.
அமெரிக்காவின் நிதிப் பற்றாக்குறை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், காங்கிரஸின் அனுமதியின்றி இவ்வளவு பெரிய நிதித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது கடினம் என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், இத்தகைய நடவடிக்கை நாட்டின் பொருளாதாரத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
இதனிடையே, இடைக்காலத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் குடியரசுக் கட்சியின் செல்வாக்கு சரிவடைந்து வருவதாகக் கூறப்படும் சூழலில், வாக்காளர்களை கவரும் நோக்கிலேயே ட்ரம்ப் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
