தமிழக முதலமைச்சர் விஜய் தனது முதல் வெளிநாட்டு அரசு முறைப் பயணமாக இன்று (11) லண்டன் சென்றடைந்துள்ளார்.
தமிழகத்தின் பொருளாதாரத்தை 2036ஆம் ஆண்டுக்குள் 1.5 ட்ரில்லியன் அமெரிக்க டொலராக உயர்த்தும் இலக்கின் ஒரு பகுதியாக, சர்வதேச முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் இந்தப் பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து நேற்று இரவு புறப்பட்ட முதலமைச்சர் விஜய், துபாய் வழியாக லண்டன் சென்றுள்ளார்.
எதிர்வரும் 16ஆம் திகதி வரை லண்டனில் தங்கியிருக்கும் அவர், பல்வேறு தொழில் முதலீட்டாளர்களைச் சந்தித்து தமிழகத்தில் முதலீடுகளை மேற்கொள்வது தொடர்பில் கலந்துரையாடவுள்ளார்.
இதனுடன், லண்டனில் வசிக்கும் தமிழ் மக்களைச் சந்திப்பது உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளிலும் முதலமைச்சர் பங்கேற்கவுள்ளார். தொடர்ந்து, 17ஆம் திகதி காலை 8 மணியளவில் துபாய் வழியாக சென்னைக்குத் திரும்பவுள்ளார்.
பொதுவாக அரசு முறைப் பயணங்களின்போது அதிகாரிகளுக்காக தனி வானூர்திகள் பயன்படுத்தப்படும் நிலையில், முதலமைச்சர் விஜய் இந்தப் பயணத்தில் பயணிகள் வானூர்தியையே பயன்படுத்தியுள்ளார்.
அவருடன் உயர்மட்ட அதிகாரிகள் குழுவினரும், தொழில்துறை அமைச்சர் கீர்த்தனாவும் லண்டன் சென்றுள்ளனர். இதேவேளை, அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேற்று இரவே லண்டனுக்குப் புறப்பட்டுச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த மாதம் 13ஆம் திகதி சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் 104 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டிருந்தன.
இதன்போது 1.2 இலட்சம் கோடி ரூபாய் அளவிலான முதலீடுகள் ஈர்க்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதலமைச்சர் விஜய்யின் முதலாவது வெளிநாட்டு அரசு முறைப் பயணம் தமிழகத்தின் தொழில்துறை வளர்ச்சியில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
இதனிடையே, லண்டனில் உள்ள தமிழ் சமூகத்தினரும் முதலமைச்சர் விஜய்க்கு வரவேற்பளிப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
