
நாவலப்பிட்டிய, மாப்பாகந்த பகுதியில் இடம்பெற்ற துயரமான விபத்தில் பாடசாலை மாணவன் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர்.
நாவலப்பிட்டிய நோக்கி பயணித்துக் கொண்டிருந்த மூன்று சக்கர வண்டி மீது பிரதான வீதிக்கு அருகிலிருந்த பெரிய யூக்கலிப்டஸ் மரம் திடீரென முறிந்து விழுந்ததிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இன்று (04) காலை 6.45 மணியளவில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், பாடசாலை மாணவன், அவரது தாய் மற்றும் மற்றொரு பெண் ஆகியோர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தின் போது மூன்று சக்கர வண்டியின் சாரதி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.
சம்பவத்தையடுத்து நாவலப்பிட்டிய பொலிஸார் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து மரத்திற்குள் சிக்கியிருந்த மூவரின் சடலங்களை மீட்டு நாவலப்பிட்டிய மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
நீண்ட காலமாக ஆபத்தான நிலையில் இருந்த மரத்தை அகற்ற பலமுறை அறிவிக்கப்பட்டிருந்தும் நடவடிக்கை எடுக்கப்படாததே இந்த துயர சம்பவத்திற்கு காரணம் என பிரதேச மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் நாவலப்பிட்டிய பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
