
அமெரிக்காவின் தேசிய விண்வெளி ஆய்வு நிறுவனம் (NASA) உருவாக்கியுள்ள புதிய அதிநவீன தொலைநோக்கி விரைவில் விண்ணில் ஏவப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பால்வெளியின் இதுவரை ஆராயப்படாத பகுதிகளில் புதிய கிரகங்களை கண்டறியும் நோக்கில் இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
‘நான்சி கிரேஸ் ரோமன்’ (Nancy Grace Roman) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த தொலைநோக்கி, வரும் செப்டம்பர் மாதத்தில் விண்ணில் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் முக்கிய இலக்காக, பால்வெளியில் இதுவரை மனிதர்களால் கண்டறியப்படாத பகுதிகளில் சுமார் 1,00,000 புதிய கிரகங்களை கண்டறிவதே குறிப்பிடப்பட்டுள்ளது. இதுவரை மனிதகுலம் மொத்தமாக சுமார் 6,300 கிரகங்களையே கண்டறிந்துள்ள நிலையில், இந்த புதிய முயற்சி விண்வெளி ஆய்வில் மிகப்பெரிய முன்னேற்றமாக கருதப்படுகிறது.
நாசாவின் இந்த தொலைநோக்கி, பிரபஞ்சத்தின் அமைப்பு, கிரக உருவாக்கம் மற்றும் வாழ்விற்கு ஏற்ற சூழல்கள் குறித்த முக்கிய தகவல்களை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விண்வெளி ஆராய்ச்சி வரலாற்றில் இந்த திட்டம் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
