நாட்டில் டெங்கு நோய்த்தொற்று வேகமாக அதிகரித்து வருவதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தின் சிரேஷ்ட பதிவாளரும் சமூக மருத்துவருமான அஹ்மட் ஷியாம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் உடனடியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.

ஈடிஸ் வகை நுளம்புகள் தேங்கி நிற்கும் சுத்தமான நீரிலேயே முட்டையிடுகின்றன. இந்த முட்டைகள் 7 முதல் 10 நாட்களுக்குள் முழுமையான நுளம்புகளாக வளர்ச்சியடைகின்றன. பழைய டயர்கள், பிளாஸ்டிக் பொருட்கள், குழந்தைகளின் விளையாட்டு உபகரணங்கள், சொப்பின் பைகள், கூரைகளின் பீலிகள், குளிர்சாதனப் பெட்டியின் பின்புறம், நீர் சுத்திகரிப்பான்கள் மற்றும் பூந்தொட்டிகளில் தேங்கும் நீர் போன்ற இடங்கள் நுளம்புகள் பெருகுவதற்கான முக்கிய காரணிகளாக உள்ளன.
டெங்கு பரப்பும் ஈடிஸ் நுளம்புகள் பொதுவாக காலை மற்றும் மாலை நேரங்களில் அதிகமாகக் கடிக்கின்றன. மேலும், இரத்த வகைக்கும் நுளம்பு கடிப்பதற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்றும் மருத்துவர் குறிப்பிட்டார்.
டெங்கு ஒரு வைரஸ் தொற்றாகும். ஆரம்பத்தில் இது சாதாரண காய்ச்சலைப் போலவே தோன்றினாலும், வைரஸ் உடலுக்குள் சென்று குருதிச் சிறுதட்டுகளை பாதிக்கத் தொடங்குகிறது. அதனால் காய்ச்சல் ஏற்பட்ட மூன்று நாட்களுக்குப் பின்னர் இரத்தப் பரிசோதனை மேற்கொள்வது அவசியம் என அவர் தெரிவித்தார்.
மூன்று நாட்களைக் கடந்தும் கடுமையான உடல் சோர்வு, வயிற்று வலி, தலைவலி போன்ற அறிகுறிகள் தொடர்ந்தால் உடனடியாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார். குருதிச் சிறுதட்டுகள் குறைவதன் காரணமாக உடலில் நீர்ச்சத்து குறைவு மற்றும் உட்புற இரத்தக் கசிவு ஏற்படும் அபாயம் அதிகரிக்கும் என்றும் எச்சரித்தார்.
டெங்கு காய்ச்சலின்போது மருத்துவரின் ஆலோசனையின்றி வலி நிவாரண மாத்திரைகளை உட்கொள்வது உயிருக்கு ஆபத்தாக மாறக்கூடும் என அவர் வலியுறுத்தினார். காய்ச்சலைக் கட்டுப்படுத்த பாராசிட்டமோல் (Paracetamol) தவிர வேறு எந்த மருந்தையும் சுயமாக பயன்படுத்தக் கூடாது என்றும் குறிப்பிட்டார்.
டெங்கு நோயாளிகளுக்கு உடலில் நீர்ச்சத்து குறைவதைத் தடுப்பதே சிகிச்சையின் முக்கிய நோக்கமாகும். இதற்காக தரமான சிகிச்சையைப் பெற அரசு மருத்துவமனைகளை நாடுவது சிறந்தது என அவர் தெரிவித்தார். வீட்டில் சிகிச்சை பெறுபவர்கள் அதிகளவு திரவ உணவுகள், பழச்சாறுகள், சூப் மற்றும் எளிதில் சீரணிக்கக்கூடிய உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
மேலும், டெங்கு பாதித்த மாணவர்கள் 7 முதல் 8 நாட்களும், பெரியவர்கள் குறைந்தது ஒரு வாரமாவது முழுமையான ஓய்வில் இருக்க வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
டெங்குவை ஏற்படுத்தும் வைரஸ்கள் நான்கு வகைகளாக இருப்பதால், ஒருமுறை டெங்கு பாதித்தவர்களுக்கு மீண்டும் தொற்று ஏற்படலாம். குறிப்பாக இரண்டாவது முறை ஏற்படும் தொற்று மிகவும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் அபாயம் உள்ளதாக மருத்துவர் எச்சரித்தார்.
தற்போது பாடசாலைகளில் டெங்கு நுளம்பு குடம்பிகள் அதிகளவில் கண்டறியப்பட்டுள்ளதால், அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் சுற்றுப்புறச் சூழலை சுத்தமாக வைத்திருக்க வேண்டுமென விசேட சுற்றுநிரூபம் வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் சுமார் 7,000 ஆக இருந்த டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை தற்போது 15,000-ஐத் தாண்டியுள்ளதாகவும், பருவமழை குறையும் காலப்பகுதியில் டெங்கு பரவலும் படிப்படியாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
டெங்குடன் சேர்த்து தற்போது பாடசாலைகள் மற்றும் அலுவலகங்களில் தலைவலி, தொண்டைவலி மற்றும் வாந்தி போன்ற அறிகுறிகளுடன் காணப்படும் சுவாச வைரஸ் தொற்றும் பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தடுப்பதற்காக முகக்கவசம் அணிவதுடன், தனிப்பட்ட சுகாதாரப் பழக்கவழக்கங்களை முறையாகப் பின்பற்றுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
