
நாட்டில் டெங்கு நோய்த்தாக்கம் தீவிரமடைந்து, பாரிய தொற்றுநோய் நிலையை எட்டியுள்ளதாக நிர்வாக சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார்.
இதன் பின்னணியில், நாடளாவிய ரீதியில் அடையாளம் காணப்பட்ட டெங்கு அதி-அபாய வலயங்களின் எண்ணிக்கை 74 இலிருந்து 84 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை, குருநாகல், புத்தளம், இரத்தினபுரி, கேகாலை, கண்டி, மாத்தளை, மட்டக்களப்பு மற்றும் பதுளை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் டெங்கு நோய் வேகமாகப் பரவி வருவதாக சுகாதார அமைச்சு எச்சரித்துள்ளது.
இந்த நிலையில், பாடசாலை மாணவர்கள் டெங்கு தொற்றுக்கு ஆளாகும் அபாயம் அதிகரித்துள்ளதாக சுகாதார பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனி சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, பாடசாலை வளாகங்களையும் அவற்றைச் சுற்றியுள்ள சூழலையும் சுத்தமாகப் பராமரிக்குமாறு பெற்றோர்கள் மற்றும் பாடசாலை அதிபர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, டெங்கு பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் நேற்று (15) ஆரம்பிக்கப்பட்ட தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தின் இரண்டாவது நாளான இன்றும் நாடு முழுவதும் சிரமதான மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
