
சுவிட்சர்லாந்தில் ஜூன் 14, 2026 அன்று நடைபெற்ற தேசிய வாக்கெடுப்பில், சுவிட்சர்லாந்து மக்கள் கட்சி (SVP) முன்வைத்த “10 மில்லியன் சுவிட்சர்லாந்து” முன்முயற்சி மக்களாலும் கான்டன்களாலும் நிராகரிக்கப்பட்டுள்ளது.
வாக்கெடுப்பில் 53.6 சதவீதம் பேர் “இல்லை” என்றும் 46.4 சதவீதம் பேர் “ஆம்” என்றும் வாக்களித்தனர். கான்டன் அடிப்படையிலும் பெரும்பான்மையான பகுதிகள் இந்த முன்முயற்சிக்கு எதிராக வாக்களித்ததால், அது அதிகாரப்பூர்வமாக தோல்வியடைந்தது.
இந்த முடிவு சுவிட்சர்லாந்தின் எதிர்காலம் திறந்த, ஒற்றுமைமிக்க மற்றும் சர்வதேச ஒத்துழைப்பை முன்னிறுத்தும் வகையில் இருக்க வேண்டும் என்ற மக்களின் விருப்பத்தை வெளிப்படுத்துவதாகக் கருதப்படுகிறது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த சுதாகரன் கணபதிப்பிள்ளை, “இல்லை” என வாக்களித்த தமிழர்கள் உள்ளிட்ட அனைத்து வாக்காளர்களுக்கும் நன்றி தெரிவித்தார். இந்த முடிவு தற்போதைய தலைமுறையினருக்கு மட்டுமன்றி, எதிர்கால தலைமுறைகளின் வாய்ப்புகளையும் பாதுகாக்கும் என அவர் குறிப்பிட்டார்.
மேலும், இந்த வாக்கெடுப்பு முடிவின் மூலம் சுவிட்சர்லாந்துக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையிலான முக்கிய இருதரப்பு ஒப்பந்தங்கள் தொடர்ந்தும் பாதுகாக்கப்பட்டுள்ளதுடன், பொருளாதாரம், சுகாதாரத் துறை மற்றும் திறமையான பணியாளர்களின் வருகைக்கும் சாதகமான சூழல் நிலைத்திருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அதேவேளை, குடியேற்றம், வீட்டு வசதி, வாழ்க்கைச் செலவு மற்றும் சமூக சமத்துவம் போன்ற சவால்கள் இன்னும் தீர்க்கப்பட வேண்டிய முக்கிய பிரச்சினைகளாகவே உள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.
