
வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் ஒப்பந்தக்காரர்களுக்கு இருமுறை கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளதை அரசாங்கம் உத்தியோகபூர்வமாக ஒப்புக்கொண்டுள்ளது.
இந்த தவறான பணப்பரிமாற்றங்களை மீளப் பெறுவதற்கான நடவடிக்கைகளை இலங்கை வங்கி முன்னெடுத்து முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட நலிந்த ஜயதிஸ்ஸ, வங்கிப் பணப்பரிமாற்றக் கோப்பில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிழை காரணமாகவே இந்த இரட்டை கொடுப்பனவுகள் நிகழ்ந்ததாக விளக்கமளித்தார்.
மேலும், இந்த தவறால் அதிகாரசபையின் கணக்குகளுக்கோ அல்லது தனிப்பட்ட கணக்குகளுக்கோ நேரடி பாதிப்பு ஏற்படவில்லை என்றும், வங்கிகளில் இத்தகைய பிழைகளை சரிசெய்து பணத்தை மீட்கும் முறைமை உள்ளதால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
இருப்பினும், முன்னதாக வெளியிடப்பட்ட அறிக்கையில் இத்தகைய இரட்டை கொடுப்பனவுகள் எதுவும் இடம்பெறவில்லை என்று அதிகாரசபை மறுத்திருந்தது. தங்களது நிதி பதிவுகளின் அடிப்படையில் எந்த கூடுதல் பரிமாற்றங்களும் இடம்பெறவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், நாமல் ராஜபக்ஷ தனது ‘X’ தளத்தில் வெளியிட்ட பதிவில், முறைமை பிழை காரணமாக 263 மில்லியன் ரூபாய் ஒப்பந்தக்காரர்களுக்கு தவறாக அனுப்பப்பட்டதாகவும், அதில் இன்னும் 51 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான தொகை மீட்கப்படாமல் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அதிகாரசபையின் முன்னைய மறுப்புக்கு பின்பு அரசாங்கம் இத்தவறை ஏற்றுக்கொண்டுள்ளமை, அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
