ஏர் இந்தியா, இண்டிகோ மற்றும் ஸ்பைஸ்ஜெட் ஆகிய நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் இந்திய வானூர்தி நிறுவனங்களின் கூட்டமைப்பு, நாட்டின் வான்வழிப் போக்குவரத்துத் துறை தற்போது “தீவிர அழுத்தத்தில்” இருப்பதாக எச்சரித்துள்ளது.

சில விமான நிறுவனங்கள் செயல்பாடுகளை நிறுத்தும் நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், மே 1ஆம் திகதி நடைபெறவுள்ள எரிபொருள் விலை திருத்தத்திற்கு முன்பாக அவசர நிவாரணம் வழங்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மசகு எண்ணெயை வானூர்தி எரிபொருளாக சுத்திகரிக்கும் எண்ணெய் நிறுவனங்களின் இலாபம் பெரிதும் உயர்ந்துள்ளதால், எரிபொருள் விலையும் வேகமாக அதிகரித்துள்ளது. இதனால் விமான நிறுவனங்களின் செயல்பாட்டு செலவுகள் கடுமையாக உயர்ந்துள்ளன.
இந்த நிலையில், கொவிட்-19 காலத்தில் பயன்படுத்தப்பட்டதைப் போன்ற “கிரெக் பேண்ட்” விலை நிர்ணய முறையை மீண்டும் அறிமுகப்படுத்துமாறு கூட்டமைப்பு பரிந்துரைத்துள்ளது. இதன் மூலம் எண்ணெய் நிறுவனங்களுக்கு நியாயமான இலாபம் கிடைப்பதோடு, விமான நிறுவனங்களின் நிதிசுமை குறையலாம் என கூறப்படுகிறது.
ஏப்ரல் 1 முதல் உள்நாட்டு விமான எரிபொருள் விலைகள் 25% உயர்த்தப்பட்டுள்ளதுடன், சர்வதேச சேவைகளுக்கான எரிபொருள் விலைகள் கிட்டத்தட்ட 100% வரை உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சர்வதேச விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
மேலும், வானூர்தி எரிபொருளுக்கு விதிக்கப்படும் உயர்ந்த வரிகள், குறிப்பாக மாநில அளவிலான வரி சுமைகள், இந்த நெருக்கடியை மேலும் தீவிரப்படுத்தியுள்ளன.
இந்தியாவின் பெரும்பாலான விமானப் போக்குவரத்துச் சந்தையை கட்டுப்படுத்தும் இந்த நிறுவனங்கள், தற்போதைய நிதி சவால்களை சமாளிக்க கலால் வரி மற்றும் மதிப்பு கூட்டு வரி குறைப்பு உள்ளிட்ட உடனடி நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளன.
