
கட்டார் எயார்வேஸ் நிறுவனம் டோஹா மற்றும் கொழும்பு இடையிலான தனது விமான சேவைகளை இன்று (01) முதல் முழுமையாக மீள ஆரம்பித்துள்ளது.
இதன்படி, தினமும் 5 விமான சேவைகள் என்ற அடிப்படையில், வாரத்திற்கு மொத்தம் 35 விமான சேவைகள் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு இயக்கப்படவுள்ளன.
இந்த சேவைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளமை, இலங்கையின் சுற்றுலாத்துறை, வர்த்தகப் பயணங்கள் மற்றும் சரக்கு போக்குவரத்து நடவடிக்கைகளுக்கு மேலும் ஊக்கமளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், டோஹா ஊடாக மத்திய கிழக்கு, ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு முக்கிய நாடுகளுக்கான விமான இணைப்புகளை பயணிகள் இலகுவாகப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பும் இதன் மூலம் விரிவடைகிறது.
கட்டார் எயார்வேஸின் சேவை அதிகரிப்பு, இலங்கையின் சர்வதேச வான்வழி இணைப்பை வலுப்படுத்துவதுடன், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பயணியர் போக்குவரத்து வளர்ச்சிக்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
