
தேசிய தரவுப் பரிமாற்ற மையம் ஒன்றை நிறுவுவதற்கான அமைச்சரவைப் பத்திரம் இந்த மாதத்திற்குள் சமர்ப்பிக்கப்படும் என டிஜிட்டல் பொருளாதார அமைச்சு அறிவித்துள்ளது.
பொதுத்துறையை முழுமையாக டிஜிட்டல் மயமாக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, அரச நிறுவனங்களுக்கு இடையில் தரவுகளை பகிர்ந்துகொள்ளும் வசதியை உருவாக்கும் நோக்கில் இந்த மையம் அமைக்கப்படவுள்ளதாக பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்துள்ளார்.
இந்த புதிய மையம் மூலம் அரச நிறுவனங்கள் இடையே தடையின்றி தரவுப் பரிமாற்றம் செய்ய முடியும் எனவும், இதனால் பொதுமக்கள் சேவைகளை விரைவாகவும் எளிதாகவும் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் கூறினார்.
இதன் மூலம் ஒரே சேவைக்காக பல அரச நிறுவனங்களுக்கு செல்வதற்கான தேவையும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதே நேரத்தில், நிறுவனங்களுக்கு இடையே தரவுகளை பகிர்வதற்கு பொதுமக்களின் அனுமதி கட்டாயமாக இருக்கும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
முழுமையான சட்ட கட்டமைப்பின் கீழ் இந்த தேசிய தரவுப் பரிமாற்ற மையம் நிறுவப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
