நாட்டில் இடம்பெற்ற காலிமுகத்திடல் போராட்டத்தின் போது உருவான அரசியல் அதிருப்தியும் வெறுப்பும், மலையகத்தில் தமக்கும் தமது குடும்ப அரசியல் பின்னணிக்கும் எதிராக திசைதிருப்பப்பட்டதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், கடந்த அரசாங்கத்திலிருந்து மக்கள் வாக்கு பெற்று இந்த சபைக்கு வந்த ஒரே நபர் தானே என குறிப்பிட்டதுடன், மலையக மக்களுக்காக தொண்டமான் குடும்பம் செய்த சேவைகளையும் நினைவுகூர்ந்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், காலிமுகத்திடல் போராட்டம் ராஜபக்ச தரப்புக்கு எதிரான அரசியல் போராட்டமாக இருந்தாலும், அதே வெறுப்பை மலையகத்தில் தொண்டமான் குடும்பத்துக்கு எதிராக வெளிப்படுத்தியதாக கூறினார். இதன் மூலம், தாங்கள் மக்களுக்காக எந்தப் பணியும் செய்யாதவர்கள் போல ஒரு தோற்றம் உருவாக்கப்பட்டதாகவும் குற்றஞ்சாட்டினார்.
முன்னாள் தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமான் மலையக மக்களுக்கு பிரஜாவுரிமை பெற்றுத்தந்ததையும், ஸ்ரீ பாத கல்லூரியை நிறுவியதையும், தோட்ட நிர்வாகங்களின் கீழ் இருந்த 864 பாடசாலைகளை அரசாங்கத்தின் கீழ் கொண்டு வந்ததையும் அவர் சுட்டிக்காட்டினார்.
அதேபோல், மறைந்த தலைவர் ஆறுமுகன் தொண்டமான் கொண்டு வந்த உதவியாசிரியர் நியமனங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களையும் நினைவுகூர்ந்த அவர், தாம் அமைச்சராக இருந்த காலத்தில் மலையகத்தில் 26,000 குழந்தைகளுக்கு இலவச காலை உணவுத் திட்டத்தை நடைமுறைப்படுத்தியதாக தெரிவித்தார்.
மக்கள் நலத்திட்டங்களை கூட “குடும்ப அரசியல்” என விமர்சிப்பதாகக் குறிப்பிட்ட ஜீவன் தொண்டமான், அதனால் மலையக மக்களின் உரிமைகள் குறித்து பேசுவதை நிறுத்த முடியாது என்றும் தெரிவித்தார்.
மேலும், அனுர குமார திசாநாயக்க தலைமையிலான புதிய அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களுக்கு இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் வழங்கியிருந்ததாக கூறிய அவர், தற்போதைய நிலையில் மலையகத்துக்கான அபிவிருத்தி மற்றும் நலன்புரி திட்டங்கள் மக்களை சரியாக சென்றடைவதில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.
