யாழ்ப்பாணத்தில் வரதட்சணை தொடர்பான அழுத்தங்களால் மனஉளைச்சலுக்கு ஆளான 19 வயது இளம் குடும்பப் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

யாழ்ப்பாணம் நாவாந்துறையைச் சேர்ந்த குறித்த யுவதி, இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்த நபரையே நான்கு மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும், அவரது கணவரின் தாயார் இந்த திருமணத்தை ஏற்காத நிலையில் இருந்ததாகவும், பின்னர் 25 பவுண் தங்க நகை மற்றும் வீடு வரதட்சணையாக கோரி தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொருளாதார வசதி குறைந்த குடும்பத்தைச் சேர்ந்த அந்த யுவதியின் பெற்றோரால் இக்கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், தனது மகனை வெளிநாட்டுக்கு அனுப்ப முயன்ற கணவரின் தாயாரிடம், கணவன் வெளிநாடு செல்ல வேண்டாம் என அந்த யுவதி கேட்டுக்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அதற்கு பதிலளித்த கணவர், தாயார் கேட்ட வரதட்சணை வழங்கப்பட்டால் மட்டுமே வெளிநாடு செல்லாமல் இருப்பேன் என கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தச் சூழ்நிலையால் கடும் மனவேதனை மற்றும் விரக்திக்குள்ளான அந்த யுவதி நேற்று காலை உயிரிழந்த நிலையில் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்த பெண்ணின் மரணம் தொடர்பான விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டுள்ளார். சம்பவம் குறித்து காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு உயிரை மாய்த்துக்கொள்வது தீர்வாகாது என சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அதேவேளை, இத்தகைய சம்பவங்கள் சமூக அழுத்தங்களும் ஆதரவின்மையும் எவ்வளவு தீவிரமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதையும் வெளிப்படுத்துகின்றன.
