லெபனானுடன் ஏற்பட்டிருந்த போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, அந்நாட்டின் தெற்கு பகுதிகளில் இஸ்ரேல் மேற்கொண்ட வான்வழித் தாக்குதல்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 16 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 58 பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த சில நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வரும் இஸ்ரேலிய தாக்குதல்களால் லெபனானில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 50ஐ கடந்துள்ளது.
மாகாணங்களை இணைக்கும் முக்கியச் சாலையான அஸ்லூன் நெடுஞ்சாலையில் நேற்று அதிகாலை நடத்தப்பட்ட டிரோன் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் உயிரிழந்தனர்.
அதேபோல், நபதியா பகுதியில் நடைபெற்ற மற்றொரு தாக்குதலில் லெபனான் ராணுவ வீரர் ஒருவரும் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெற்கு லெபனானைத் தொடர்ந்து, தலைநகர் பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் மீதும் இஸ்ரேல் போர் விமானங்கள் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளன.
ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய ஆதிக்கப் பகுதியாகக் கருதப்படும் இந்த பகுதியில், சுமார் மூன்று வாரங்களுக்கு பிறகு இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளது.
தாக்குதலுக்கு முன்னதாக, Tyre உள்ளிட்ட தெற்கு லெபனானின் பல பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனடியாக வெளியேறுமாறு இஸ்ரேல் ராணுவம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்த நடவடிக்கையால், லெபனானின் சுமார் 14 சதவீத நிலப்பரப்பு கட்டாய இடம்பெயர்வு அச்சுறுத்தலுக்குள் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறியதால், அங்கு கடுமையான மனிதாபிமான நெருக்கடி நிலவி வருகிறது.
