
அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம் நாசா, நிலவில் மனிதர்கள் நீண்ட காலம் தங்குவதற்கான நிரந்தர ஆய்வு தளம் அமைக்கும் புதிய மூன்று கட்ட திட்டத்தை அறிவித்துள்ளது.
சமீபத்தில், ஆர்ட்டெமிஸ்–2 திட்டத்தின் மூலம் நான்கு விண்வெளி வீரர்கள் நிலவை சுற்றிப் பயணம் செய்து வெற்றிகரமாக திரும்பினர். 54 ஆண்டுகளுக்குப் பிறகு மனிதர்கள் நிலவை நெருங்கிச் சென்ற முக்கிய சாதனையாக இது கருதப்படுகிறது.
இந்த முயற்சியின் தொடர்ச்சியாக, நிலவில் நிரந்தர ஆய்வு மையம் அமைக்கும் மிகப்பெரிய திட்டத்தை நாசா தற்போது வெளியிட்டுள்ளது. இந்த திட்டத்திற்காக சுமார் 1.70 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
நிலவின் மேற்பரப்பில் ரோவர்கள், ட்ரோன்கள் மற்றும் நவீன ஆய்வு உபகரணங்களுடன் கூடிய தளத்தை அமைப்பதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். ரோவர்கள் மூலம் கற்கள் மற்றும் மணல் மாதிரிகள் சேகரிக்கப்படவுள்ளன. ட்ரோன்கள் நிலவின் பல பகுதிகளை ஆய்வு செய்ய பயன்படுத்தப்பட உள்ளன.
இதுகுறித்து நாசா நிர்வாகி ஜாரெட் ஐசக்மேன் தெரிவித்ததாவது:
“அமெரிக்கா மீண்டும் நிலவுக்கு திரும்புகிறது. மனிதகுலத்தின் முதல் நிரந்தர வெளி உலக ஆய்வு தளமாக இந்த மையம் உருவாகும். நிலவின் கடுமையான சூழலில் மனிதர்கள் எவ்வாறு வாழ முடியும் என்பதை இந்த ஆய்வு தளம் மூலம் அறிய முடியும்,” என்றார்.
மேலும், 2028 ஆம் ஆண்டுக்குள் விண்வெளி வீரர்களை நிலவில் தரையிறக்குவது நாசாவின் முக்கிய இலக்காக இருப்பதாகவும், அதற்கான தொழில்நுட்ப சோதனைகள் இந்த ஆண்டிலேயே மூன்று விண்கலங்கள் மூலம் தொடங்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
