
இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2026 தொடர் நிறைவடைந்த பின்னர், ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக இந்தியா ஒரு டெஸ்ட் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது.
இந்தத் தொடருக்கான இந்திய அணியில் விக்கெட் காப்பாளர் சஞ்சு சாம்சன் இடம்பெறாமல் போகலாம் என இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
IPL 2026 இறுதிப்போட்டி மே 31ஆம் திகதி அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ள நிலையில், அதற்கு ஐந்து நாட்கள் கழித்து ஆப்கானிஸ்தான் தொடரின் டெஸ்ட் போட்டி ஆரம்பமாகிறது.
தொடரின் அட்டவணை:
- டெஸ்ட் போட்டி – ஜூன் 6 – முல்லன்பூர்
- முதல் ஒருநாள் போட்டி – ஜூன் 14 – தர்மசாலா
- இரண்டாவது ஒருநாள் போட்டி – ஜூன் 17 – லக்னோ
- மூன்றாவது ஒருநாள் போட்டி – ஜூன் 20 – சென்னை
இந்த தொடரில் இந்திய அணியை சுப்மன் கில் வழிநடத்துவார் என எதிர்பார்க்கப்படுவதுடன், வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஓய்வு வழங்கப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.
ஒருநாள் அணிக்கான முதல் விக்கெட் காப்பாளராக கே.எல். ராகுல் தொடர்ந்தும் இருப்பார் என்றும், இரண்டாவது தெரிவாக இஷான் கிஷன் மீண்டும் அணியில் சேர்க்கப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், அண்மையில் நடைபெற்ற T20 உலகக் கிண்ணத்தில் இந்தியாவின் வெற்றிக்கு பங்களித்ததுடன், நடப்பு IPL தொடரிலும் சிறந்த ஃபார்மில் உள்ள இஷான் கிஷனுக்காக ரிஷப் பண்ட் கூட அணியில் இருந்து நீக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இரண்டு ஆண்டுகளாக ஒருநாள் போட்டிகளில் விளையாடாத இஷான் கிஷன், உள்ளூர் மற்றும் IPL போட்டிகளில் வெளிப்படுத்திய திறமையால் மீண்டும் தேர்வாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். அவர் இந்த IPL தொடரில் 12 போட்டிகளில் 420 ஓட்டங்கள் எடுத்துள்ளார்.
மறுபுறம், அண்மைய T20 உலகக் கிண்ண வெற்றியில் பங்காற்றியிருந்தாலும், சஞ்சு சாம்சன் ஒருநாள் தொடருக்கான அணியில் இடம்பெறாமல் ஓரங்கட்டப்படலாம் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2027ஆம் ஆண்டு நடைபெறவுள்ள 50 ஓவர் உலகக் கிண்ணம் மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியை இலக்காகக் கொண்டு இந்திய தேர்வுக்குழு திட்டமிடலை ஆரம்பித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஆப்கானிஸ்தான் தொடருக்கான இந்திய அணி மே 19ஆம் திகதி BCCI மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது.
