
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் செம்மஞ்சள் (Amber) நிற அவசர எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இன்று மாலை வெளியிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், நாட்டிற்கு வடகிழக்குத் திசையில் வங்காள விரிகுடாவின் தென்மேற்கு பகுதியில் நிலைகொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் தொடர்ந்தும் அதே இடத்தில் நீடிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் தாக்கத்தால், நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் மழையுடனான காலநிலையும் பலத்த காற்றுடனான சூழ்நிலையும் தொடர்ந்து நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், ஆழம் கூடிய மற்றும் ஆழம் குறைந்த கடற்பரப்புகளிலும், வங்காள விரிகுடாவின் ஆழ்கடல் பகுதிகளிலும் மிக பலத்த காற்று வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால் கடற்பரப்புகள் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, அடுத்த 168 மணித்தியாலங்களுக்குள் (7 நாட்களுக்குள்) இந்த குறைந்த அழுத்தப் பிரதேசம் சூறாவளியாக மாறுவதற்கான சாத்தியம் இல்லை என வளிமண்டலவியல் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.
கடல்சார் தொழிலாளர்கள், மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் காலநிலை மாற்றங்கள் குறித்து மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும், வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிடும் எதிர்கால முன்னறிவிப்புகள் மற்றும் உத்தியோகபூர்வ அறிவிப்புகளை தொடர்ந்து கவனிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
