
ஈரானின் முக்கிய வங்கிகளை குறிவைத்து இணையத் தாக்குதல்; சேவைகள் தற்காலிகமாக பாதிப்பு
ஈரானின் நான்கு முக்கிய வர்த்தக வங்கிகளின் தகவல் தொடர்பு கட்டமைப்பை இலக்காகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட இணையத் தாக்குதல் காரணமாக, அவற்றின் சில சேவைகள் தற்காலிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், இந்தத் தாக்குதலால் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தரவுகள் அல்லது வங்கிக் கணக்கு விபரங்கள் எதுவும் பாதிக்கப்படவில்லை என ஈரானின் வங்கி ஒருங்கிணைப்பு பேரவை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
ஈரானிய ஏற்றுமதி மேம்பாட்டு வங்கி, Bank Melli, Bank Tejarat மற்றும் Bank Saderat ஆகிய வங்கிகள் இந்தத் தாக்குதலின் இலக்குகளாக அமைந்துள்ளன. இவ்வங்கிகள் பொதுவாகப் பயன்படுத்தும் மத்திய தகவல் தொடர்பு உட்கட்டமைப்பை குறிவைத்தே இணையத் தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தையடுத்து, ஈரானிய வங்கித் துறையின் தொழில்நுட்ப நிபுணர்கள் உடனடியாக நடவடிக்கையில் ஈடுபட்டு, தரவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான பாதுகாப்பு நடைமுறைகளை மேற்கொண்டுள்ளனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சில வங்கிச் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டதாகவும், நிலைமையை வழமையான நிலைக்குக் கொண்டுவரும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
