2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர (க.பொ.த) சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் அடுத்த வார இறுதிக்குள் வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், பரீட்சை விடைத்தாள்கள் அனைத்தும் திருத்தப்பட்டு, பெறுபேறுகள் ஒழுங்கமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளதுடன், தற்போது இறுதிக்கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக குறிப்பிட்டார். இதனால், அடுத்த வார நிறைவுக்குள் பெறுபேறுகளை வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
இதேவேளை, 2026ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர மற்றும் உயர்தரப் பரீட்சைகளுக்கான பாடத்திட்டங்களை திட்டமிட்ட காலத்திற்குள் பூர்த்தி செய்யுமாறு கல்வி அமைச்சு அனைத்து பாடசாலைகளுக்கும் அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ, அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் கல்வி அதிகாரிகளுக்கு விசேட சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.
ஏதேனும் பாடசாலைகளில் பாடத்திட்டங்களை நிறைவு செய்வதில் தாமதம் ஏற்பட்டால், முன்கூட்டிய திட்டமிடலின் மூலம் அல்லது தேவையெனில் மேலதிக நேரத்தை ஒதுக்கி, பாடத்திட்டங்களை முழுமையாக கற்பித்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
2026ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர மற்றும் உயர்தரப் பரீட்சைகள் கல்வி நாட்காட்டியில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள தேதிகளிலேயே நடத்தப்படும் என கல்வி அமைச்சு மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
மாணவர்கள் பரீட்சைகளுக்கு முழுமையாகத் தயாராகும் வகையில், பாடசாலைகள் பாடத்திட்டங்களை தாமதமின்றி நிறைவு செய்ய வேண்டும் என செயலாளர் நாலக கலுவெவ தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார்.
