குவைத் சர்வதேச விமான நிலையத்தை இலக்கு வைத்து ஈரான் இன்று (03) ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தத் தாக்குதல்களில் பலர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுவதுடன், பாதுகாப்பு காரணங்களால் விமான நிலையத்தின் நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.
இதனையடுத்து, குவைத் விமான நிலையத்தை நோக்கி பயணித்த சில விமானங்கள் மாற்று விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், தாக்குதலால் விமான நிலையத்தின் ‘டி1’ முனையக் கட்டடம் சேதமடைந்துள்ளதாக அந்நாட்டு பொது சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையை மேற்கோள் காட்டி உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதற்கிடையில், குவைத் நோக்கி ஏவப்பட்ட இரண்டு ஏவுகணைகள் இலக்கை அடையத் தவறியதாகவும் அல்லது நடுவழியில் செயலிழந்ததாகவும் அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.
அதேவேளை, பஹ்ரைனை இலக்கு வைத்து ஏவப்பட்ட மூன்று ஏவுகணைகள் அமெரிக்க மற்றும் பஹ்ரைன் பாதுகாப்புப் படைகளால் இடைமறித்து அழிக்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான் அண்டை நாடுகளை நோக்கி பலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவிய போதிலும், அவை பெரும்பாலும் தங்களது இலக்குகளை அடையத் தவறியதாக அமெரிக்க மத்திய கட்டளைப் பணியகம் தெரிவித்துள்ளது.
இதற்கு பதிலடியாக அமெரிக்கப் படைகள் ஈரானின் கெஷ்ம் தீவு பகுதியில் தாக்குதல்களை மேற்கொண்டதுடன், பல ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை முறியடித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
