
மறைந்த ஈரானின் முன்னாள் உச்ச தலைவரான Ali Khamenei அவர்களுக்காக மூன்று நாள் அரச மரியாதை இறுதிச் சடங்கை நடத்த ஈரான் திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்டதாகக் கூறப்படும் தாக்குதலில் கடந்த பெப்ரவரி மாதம் உயிரிழந்த கமேனிக்கான இறுதிச் சடங்கு ஆரம்பத்தில் மார்ச் மாதத்தில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், பாதுகாப்பு மற்றும் ஏற்பாட்டு சவால்கள் காரணமாக அது ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
ஈரானின் அரசு ஒளிபரப்பு நிறுவனமான IRIB-க்கு கருத்து தெரிவித்த தெஹ்ரான் துணை மேயர் Mohammad Amin Tavakolizadeh, இறுதிச் சடங்கு மற்றும் அஞ்சலி நிகழ்வுகள் தெஹ்ரான், கோம் மற்றும் மஷ்ஹத் நகரங்களில் மூன்று நாட்கள் நடைபெறவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
தெஹ்ரானில் நடைபெறும் பிரதான இறுதி ஊர்வலம் குறைந்தது 24 மணி நேரம் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுவதுடன், சுமார் 2 கோடி மக்கள் வரை பங்கேற்கக்கூடும் என அதிகாரிகள் கணித்துள்ளனர்.
இறுதி நிகழ்வுகளுக்கான துல்லியமான இடம் இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், தெஹ்ரானின் Grand Mosalla of Tehran அல்லது Imam Khomeini Mausoleum ஆகிய இடங்களில் ஒன்று தேர்வு செய்யப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறுதியாக, கமேனியின் உடல் புனித நகரங்களான Qom மற்றும் Mashhad ஆகிய பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர், மஷ்ஹத்தில் அமைந்துள்ள Imam Reza Shrine வளாகத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
