ஹோர்முஸ் நீரிணை ஊடாக 24 வணிகக் கப்பல்கள் பாதுகாப்பாக பயணிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவற்படை அறிவித்துள்ளது.

கடந்த 24 மணித்தியாலங்களில் இந்த வணிகக் கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து சென்றதாகவும், அவை அனைத்தும் ஈரானின் புரட்சிகர காவற்படையின் கடற்படையுடன் உரிய ஒருங்கிணைப்பு மற்றும் அனுமதிகளைப் பெற்று பயணித்ததாகவும் ஈரானின் அரச ஊடகமான IRIB செய்தி வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து இஸ்லாமிய புரட்சிகர காவற்படை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஹோர்முஸ் நீரிணை மீதான கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் முழுமையான அதிகாரத்துடன் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பாரசீக வளைகுடா மற்றும் ஹோர்முஸ் நீரிணைப் பிராந்தியங்களில் வெளிநாட்டு சக்திகளின் தலையீட்டுக்கு இடமில்லை என்றும், அப்பகுதியின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உலகின் முக்கியமான எண்ணெய் மற்றும் வர்த்தகக் கப்பல் போக்குவரத்து பாதைகளில் ஒன்றாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையைச் சுற்றியுள்ள பதற்றமான சூழ்நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
