
ஹொரணை, கொபவகவத்தை பகுதியில் சட்டவிரோதமாக முன்னெடுக்கப்பட்டு வந்த பாரிய அளவிலான இரத்தினக் கல் அகழ்வு நடவடிக்கையை வலான மத்திய மோசடி தடுப்புப் பிரிவினர் சுற்றிவளைத்து முறியடித்துள்ளனர்.
நீண்டகாலமாக இடம்பெற்று வந்ததாகக் கூறப்படும் இந்த சட்டவிரோத நடவடிக்கை தொடர்பில் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையின் போது, இரத்தினக் கல் வர்த்தகர்கள் மூவர் உட்பட 25 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், அகழ்வு நடவடிக்கைக்கு பயன்படுத்தப்பட்ட 11 படகுகள், 5 மோட்டார்கள் மற்றும் பல்வேறு இயந்திரங்கள், உபகரணங்கள் என்பனவும் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவற்றின் மொத்த பெறுமதி சுமார் ரூ.7 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வலான மத்திய மோசடி தடுப்புப் பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.
