
ரூ.20 இலட்சம் கையூட்டல் பணத்தைக் கோரி பெற்றுக்கொண்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் இரு சந்தேகநபர்களை கையூட்டல் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு கைது செய்துள்ளது.
விசாரணைகளின்படி, பேராதனைப் போதனா மருத்துவமனைக்கு 2027 ஆம் ஆண்டுக்கான உணவுப் பொருட்கள் விநியோக ஒப்பந்தம் தொடர்பாக, முறைப்பாட்டாளரின் தந்தை மற்றும் மாமனாரின் பெயர்களில் விலைமனு விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்படாமல் இருப்பதற்கும், அதன் மூலம் போட்டித்தன்மையைத் தவிர்ப்பதற்கும் முதலாவது சந்தேகநபர் ஆரம்பத்தில் ரூ.30 இலட்சம் கையூட்டல் கோரியுள்ளார்.
பின்னர் அந்தத் தொகை ரூ.25 இலட்சமாகக் குறைக்கப்பட்டு, இறுதியில் ரூ.20 இலட்சம் கையூட்டலாக பெற்றுக்கொள்ளப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், நேற்று காலை கம்பளை அஞ்சல் நிலைய வாகனத் தரிப்பிடத்திற்கு அருகில் கையூட்டல் பணத்தை பெற்றுக்கொண்டதாகக் கூறப்படும் கம்பளையைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரும், அதற்கு உடந்தையாக இருந்த மற்றொருவரும் சுமார் 30 நிமிட இடைவெளியில் கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கையூட்டல் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு மேற்கொண்டு வருகிறது.
