கால்பந்து செம்பியன்ஷிப் 2026 தொடரில் பங்கேற்று வரும் எகிப்து தேசிய அணியின் பணிப்பாளர் இப்ராஹிம் ஹசன் மற்றும் வீரர் ட்ரெசெகுவெட் ஆகியோரை டல்லாஸ் காவல்துறை அதிகாரி ஒருவர் தள்ளிவிட்டதாக எகிப்து அணி நிர்வாகம் புகார் தெரிவித்துள்ளது.

கனடா, மெக்சிகோ மற்றும் அமெரிக்கா இணைந்து நடத்தும் தொடரின் போது, டல்லாஸில் அமைந்துள்ள அணியின் தங்கும் விடுதியில் நேற்று இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ரசிகர் ஒருவருடன் புகைப்படம் எடுக்க முயன்றபோது இந்தச் சம்பவம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தச் சம்பவம், 32 அணிகள் சுற்றில் எகிப்து அணி அவுஸ்திரேலியாவை எதிர்கொண்ட தினத்திலேயே இடம்பெற்றுள்ளது.
இதுகுறித்து விளக்கமளித்த டல்லாஸ் காவல்துறை, அனுமதி அட்டை இல்லாத ஒருவர் விடுதிக்குள் நுழைய முயன்றதாக பாதுகாப்புப் பிரிவினரிடம் இருந்து தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து அதிகாரிகள் அங்கு சென்றதாக தெரிவித்துள்ளது.
மேலும், சம்பவம் அங்கேயே சுமுகமாகத் தீர்க்கப்பட்டதுடன், எகிப்து அணி பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டதாகவும் டல்லாஸ் காவல்துறை குறிப்பிட்டுள்ளது.
