சமூக வலைத்தளங்கள் மூலம் விமானப் பணியாளர்களை குறிவைக்கும் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள்

தாய்லாந்தில் இருந்து அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு போதைப்பொருட்களைக் கடத்துவதற்காக, சர்வதேச கடத்தல் கும்பல்கள் சமூக வலைத்தளங்கள் மூலம் விமானப் பணியாளர்களை குறிவைத்து வரும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்தில், தாய் ஏர்வேஸ் நிறுவனத்தின் விமானப் பணிப்பெண் ஒருவர் அவுஸ்திரேலியாவில் ஒரு கிலோவுக்கும் அதிகமான ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இந்தக் கடத்தல் வலையமைப்பு வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட ஹெரோயினின் சர்வதேச சந்தை மதிப்பு பல கோடி ரூபாய் என தெரிவிக்கப்படுகிறது.

விசாரணைகளில், வெறும் 8,800 தாய் பாட் தொகைக்காக, பேஸ்புக் மூலம் அறிமுகமான நபரின் பயணப் பொதியை அவுஸ்திரேலியாவுக்கு எடுத்துச் செல்ல அவர் இணங்கியிருந்ததாக தெரியவந்துள்ளது.

புலனாய்வு தகவல்களின்படி, போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள் டிக்டொக் மற்றும் பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் போலி கணக்குகளை உருவாக்கி, “நீங்கள் அவுஸ்திரேலியா செல்கிறீர்களா? எங்களுக்காக ஒரு பொதியை எடுத்துச் சென்றால் எவ்வளவு கட்டணம் வேண்டும்?” போன்ற செய்திகளை அனுப்பி விமானப் பணியாளர்களை அணுகுகின்றன.

மியன்மார் உள்ளிட்ட அண்டை நாடுகளில் தயாரிக்கப்படும் ஹெரோயின், ஆடைகள், காபி தூள் பொதிகள் மற்றும் குளிர்கால ஜாக்கெட்டுகள் போன்றவற்றுக்குள் மிக நுட்பமாக மறைக்கப்பட்டு தாய்லாந்து வழியாக வெளிநாடுகளுக்குக் கடத்தப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மட்டும் தாய்லாந்தில் இருந்து பயணித்த ஆறுக்கும் மேற்பட்டோர் போதைப்பொருள் கடத்தல் வழக்குகளில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நாட்டின் நற்பெயருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தாய்லாந்து பிரதமர் அனுதின் சார்ன்விராகுல் கவலை வெளியிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, தாய்லாந்து விமான நிலையங்களில் விமானக் குழுவினரின் உடைமைகள் மீதான பாதுகாப்புச் சோதனைகள் மேலும் தீவிரப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், அவுஸ்திரேலியா மற்றும் தாய்வானுக்கு கடத்தப்பட இருந்த சுமார் 24 கிலோ ஹெரோயினை தாய்லாந்து அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளதுடன், இது தொடர்பாக தாய்லாந்தைச் சேர்ந்த ஒருவரும், லாவோஸைச் சேர்ந்த அவரது மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முன்பின் அறிமுகமில்லாத நபர்களிடமிருந்து எந்தவொரு பொருளையும் பணத்திற்காகவோ அல்லது உதவிக்காகவோ பெற்றுச் செல்ல வேண்டாம் என விமானப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு அமைப்புகள் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளன.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top