
மின்சார விநியோகக் கட்டமைப்பின் முல்லேரியா உப மின்நிலையத்தில் மேற்கொள்ளப்படும் அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் மற்றும் தெஹிவளை, மாளிகாவத்தை லைட்ஹவுஸ் நீர் உந்து நிலையங்களின் மேம்பாட்டுப் பணிகள் காரணமாக, இன்று (04) கொழும்பு மற்றும் புறநகர்ப் பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளது.
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இன்று முற்பகல் 9.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை இந்த நீர் விநியோகத்தடை அமுலில் இருக்கும்.
இதன்படி, கொழும்பு 01 முதல் 15 வரையான அனைத்து பகுதிகளிலும், ஸ்ரீ ஜெயவர்தனபுர கோட்டே, பத்தரமுல்ல, பெலவத்தை, ஹோகந்தர, கொஸ்வத்தை, தலவத்துகொட, ராஜகிரிய, மிரிஹான, மாதிவெல, நுகேகொட, நாவல, கொலன்னாவ, கொட்டிகாவத்தை, அங்கொட, வெல்லம்பிட்டிய, ஒருகொடவத்தை, கடுவெல, மஹரகம, பொரலஸ்கமுவ மற்றும் பிலியந்தலை உள்ளிட்ட பகுதிகளிலும் நீர் விநியோகம் தடைப்படும்.
இதனால் ஏற்படக்கூடிய அசௌகரியங்களைத் தவிர்க்க, தேவையான குடிநீரை முன்கூட்டியே சேமித்து வைத்துக்கொள்ளுமாறும், கிடைக்கும் நீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
