
நாட்டின் சில பகுதிகளில் இன்று மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அந்தத் திணைக்களம் வெளியிட்டுள்ள சமீபத்திய வானிலை அறிக்கையின்படி, மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
மேலும், ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், முல்லைத்தீவு மாவட்டத்திலும் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனுடன், மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகள், தென் மற்றும் வடமத்திய மாகாணங்கள், திருகோணமலை மாவட்டம் ஆகிய பகுதிகளில் மணித்தியாலத்துக்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, களு மற்றும் நில்வலா உள்ளிட்ட பிரதான ஆறுகளின் நீர்மட்டம் தற்போது குறைவடைந்துள்ளதாக நீர்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது.
முன்னதாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்ட பகுதிகளிலும் ஆறுகளின் நீர்மட்டம் படிப்படியாக குறைந்து வருவதாக, நீர்பாசன திணைக்களத்தின் நதிகள் முகாமைத்துவ பிரிவின் பிரதம பொறியியலாளர் எஸ். ஜெயம் பார்த்தசாரதி தெரிவித்துள்ளார்.
