சித்திரை புத்தாண்டை முன்னிட்டு, ஏப்ரல் 13 மற்றும் 14 ஆகிய தினங்களில் நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களையும் மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை கலால் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளரும் பிரதி ஆணையாளருமான ஏ.ஏ. ரொஷான் பெரேரா வெளியிட்டுள்ளார். அரசாங்கத்தின் அனுமதியுடன் அமுல்படுத்தப்படும் இந்த உத்தரவின் அடிப்படையில், மதுபான விற்பனைக்கு உரிமம் பெற்ற அனைத்து நிறுவனங்களும் குறித்த இரண்டு நாட்களிலும் செயல்படக்கூடாது.
இதில் வெளிநாட்டு மதுபான விற்பனை நிலையங்கள், பார்கள், விருந்தகங்கள் மற்றும் உணவகங்களில் நடைபெறும் மதுபான விற்பனையும் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த உத்தரவை மீறி மதுபான விற்பனையில் ஈடுபடுவோருக்கு எதிராக கலால் திணைக்களச் சட்டத்தின் கீழ் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
