
சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவோருக்கு விதிக்கப்படும் தண்டனைகளை கடுமையாக்கும் வகையில், பெண்கள், இளைஞர்கள் மற்றும் சிறுவர்களுக்கான வேலைவாய்ப்புச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள அரசாங்கம் முன்மொழிந்துள்ளது.
இந்த சட்டத் திருத்தத்தின் கீழ், தற்போது நடைமுறையில் உள்ள 10,000 ரூபாய் அபராதத்தை 1 இலட்சம் ரூபாயாக உயர்த்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், குற்றம் நிரூபிக்கப்படும் நபர்களுக்கு 12 மாதங்கள் வரை சிறைத் தண்டனை விதிக்கவும் சட்டமூலம் வழிவகை செய்கிறது.
அத்துடன், வழக்கின் தன்மை மற்றும் குற்றத்தின் தீவிரத்தைப் பொருத்து, குற்றவாளிகளுக்கு அபராதம், சிறைத் தண்டனை அல்லது இவை இரண்டையும் ஒன்றாக விதிக்கும் அதிகாரம் நீதிமன்றத்திற்கு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுவர் தொழிலாளர்களை ஒழித்து, சிறுவர்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் இந்த சட்டத் திருத்தம் முன்வைக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
