
பல ஆண்டுகளுக்குப் பிறகு வானில் தோன்றவுள்ள ‘நீல நிலவு’ (Blue Moon) எனப்படும் அரிய வானியல் நிகழ்வை இன்று (31) இரவு பொதுமக்கள் பார்வையிட முடியும் என விண்வெளி விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக விண்வெளி விஞ்ஞானி கிஹான் வீரசேகர வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்த நிகழ்வு பொதுவாக இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை அல்லது சில சந்தர்ப்பங்களில் 19 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழக்கூடிய அரிய வானியல் சம்பவமாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
‘நீல நிலவு’ என்ற பெயர் இருந்தாலும், சந்திரன் உண்மையில் நீல நிறமாக மாறாது என்றும், ஒரே நாட்காட்டி மாதத்தில் தோன்றும் இரண்டாவது முழு நிலவையே ‘நீல நிலவு’ என அழைப்பதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.
இன்று இரவு வானம் மேகமூட்டமின்றி தெளிவாகக் காணப்பட்டால், இலங்கையின் எந்தப் பகுதியிலிருந்தும் இந்த அரிய வானியல் நிகழ்வை பொதுமக்கள் தெளிவாகக் காண முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வானியல் ஆர்வலர்களுக்கு இது ஒரு சிறப்பான பார்வை அனுபவமாக அமையும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
