
கிழக்கு ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற பாரிய சாலை விபத்தில் 10 குழந்தைகள் மற்றும் 5 பெண்கள் உட்பட மொத்தம் 18 ஆப்கானிய அகதிகள் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜலாலாபாத் நகரத்தையும் தலைநகர் காபூலையும் இணைக்கும் லக்மேன் மாகாண நெடுஞ்சாலையில் நேற்று (30) இந்த துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பாகிஸ்தானில் தங்கியிருந்த ஆப்கானிய அகதிகள் தாயகத்திற்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, அவர்கள் பயணித்த லொறி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தலைகீழாகக் கவிழ்ந்ததாக லக்மேன் மாகாண ஆளுநரின் செய்தித் தொடர்பாளர் அப்துல் மாலிக் நியாசாய் தெரிவித்துள்ளார்.
இந்த விபத்தில் மேலும் 29 பேர் காயமடைந்துள்ளதுடன், அவர்கள் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பல தசாப்தங்களாக நீடித்து வரும் மோதல்கள், தரமற்ற சாலைக் கட்டமைப்பு, பாதுகாப்பற்ற வாகன ஓட்டம் மற்றும் போக்குவரத்து விதிமுறைகளின் குறைபாடு ஆகியவை ஆப்கானிஸ்தானில் அடிக்கடி ஏற்படும் சாலை விபத்துகளுக்கான முக்கிய காரணங்களாகக் கருதப்படுகின்றன.
இந்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
