மத்திய கிழக்கு மோதல்கள் மற்றும் ‘டிட்வா’ சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வழங்கப்படும் தற்காலிக நிவாரணங்களுக்கு அரசாங்கம் ஒதுக்கும் நிதி 100 பில்லியன் ரூபாவிற்குள் மட்டுப்படுத்தப்படும் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, சர்வதேச நாணய நிதியத்துக்கு (IMF) உறுதியளித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவாவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
மேலும், தற்போது வழங்கப்படும் அனைத்து தற்காலிக நிவாரணங்களும் வரும் செப்டம்பர் மாத இறுதிக்குள் படிப்படியாக நிறுத்தப்படும் என்றும், நாட்டின் நிதி இலக்குகள் வெற்றிகரமாக எட்டப்பட்டால் மட்டுமே ‘அஸ்வெசும’ நலன்புரித் திட்டத்தின் ஊடாக மேலதிக உதவிகளை வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இலங்கைக்கான IMF-இன் 48 மாத விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் ஐந்தாவது மற்றும் ஆறாவது மீளாய்வுகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன. இதன் மூலம் இலங்கைக்கு உடனடியாக சுமார் 695 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி விடுவிக்கப்படவுள்ளது.
அதன்படி, இதுவரை இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள மொத்த IMF நிதி உதவி 2.4 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளது.
அண்மைய அனர்த்தங்கள் மற்றும் சர்வதேச சூழ்நிலைகள் காரணமாக இலங்கையின் பொருளாதார வளர்ச்சியில் தாக்கம் ஏற்பட்டுள்ளதாக IMF தெரிவித்துள்ளது. 2025 ஆம் ஆண்டில் 5 சதவீதமாக இருந்த பொருளாதார வளர்ச்சி, 2026 ஆம் ஆண்டில் 3 சதவீதமாகக் குறையும் என கணிக்கப்பட்டுள்ளது.
மேலும், ‘டிட்வா’ சூறாவளியால் மட்டும் இலங்கைக்கு 3.4 பில்லியன் அமெரிக்க டொலர் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், மத்திய கிழக்கு பதற்றங்களின் தாக்கத்தால் மார்ச் மாத சுற்றுலா வருகைகள் 20 சதவீதம் குறைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேவேளை, எரிசக்தி செலவுகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு காரணமாக, கடந்த ஏப்ரல் மாதத்தில் பணவீக்கம் 5.4 சதவீதமாக உயர்ந்துள்ளதாக IMF சுட்டிக்காட்டியுள்ளது.
பெப்ரவரி மாதத்திற்குப் பின்னர் எரிபொருள் விலைகள் 38 முதல் 46 சதவீதம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளதையும் IMF தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
தற்காலிக பின்னடைவுகள் இருந்தபோதிலும், 2027 ஆம் ஆண்டு முதல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.3 சதவீத முதன்மை உபரி இலக்கை அடைவது உள்ளிட்ட கடுமையான நிதி மறுசீரமைப்புகளை இலங்கை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் என IMF வலியுறுத்தியுள்ளது.
