
அவுஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்டோருக்கான சமூக ஊடகப் பயன்பாட்டுக்குத் தடை விதிக்கும் சட்டம் தீவிரமாக அமுல்படுத்தப்பட்டு வரும் நிலையில், சந்தேகத்திற்குரிய 7.56 இலட்சத்துக்கும் அதிகமான கணக்குகளை முடக்கியுள்ளதாக மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமின் தாய் நிறுவனமான மெட்டா, இதுவரை சுமார் 4.62 இலட்சம் இன்ஸ்டாகிராம் கணக்குகளையும், 2.94 இலட்சம் ஃபேஸ்புக் கணக்குகளையும் செயலிழக்கச் செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
சிறார்களின் உடல் மற்றும் உளநலப் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் அவுஸ்திரேலிய அரசாங்கம் இந்தக் கட்டுப்பாட்டுச் சட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
99 மில்லியன் டொலராக அதிகரிக்கும் அபராதம்
சட்டத்தை மீறும் சமூக ஊடக நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் அதிகபட்ச அபராதத் தொகையை 99 மில்லியன் அவுஸ்திரேலிய டொலராக உயர்த்த அவுஸ்திரேலிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது சுமார் 69.75 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு சமமானதாகும்.
இதனிடையே, சட்டத்தின் அமுலாக்கம் தொடர்பாக வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள நாடாளுமன்ற விசாரணையில் மெட்டா, டிக்டொக், கூகுள் (யூடியூப்) மற்றும் ஸ்னாப்சாட் ஆகிய நிறுவனங்களின் பிரதிநிதிகள் சாட்சியமளிக்க உள்ளனர்.
AI மூலம் சிறார்களை அடையாளம் காணும் நடவடிக்கை
பயனர்களின் பதிவுகள், பிறந்த திகதி மற்றும் பாடசாலையில் அவர்கள் கல்வி கற்கும் தரம் உள்ளிட்ட தகவல்களை பகுப்பாய்வு செய்வதற்கு செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை மெட்டா பயன்படுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஏற்கனவே முடக்கப்பட்ட கணக்குகளின் உரிமையாளர்கள் மீண்டும் புதிய கணக்குகளை உருவாக்குவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளையும் மெட்டா முன்னெடுத்து வருகிறது.
