இந்தியாவில் கரையை நோக்கி அதிவேகமாக சென்ற பாரிய கப்பல்: அலறியடித்து ஓடிய மக்கள்

சிங்கப்பூர் கொடியுடன் பயணித்த ‘MV Nawata Bhum’ என்ற பாரிய சரக்குக் கப்பல், இந்தியாவின் மேற்கு வங்காளத்தில் உள்ள ஹூக்ளி ஆற்றின் கரையில் கட்டுப்பாட்டை இழந்து மோதி விபத்துக்குள்ளானது.

இந்தச் சம்பவம் நேற்று (13) காலை சுமார் 11 மணியளவில் இடம்பெற்றதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மலேசியாவின் கிளாங் துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட குறித்த கப்பல், கொல்கத்தாவில் அமைந்துள்ள ஷியாமா பிரசாத் முகர்ஜி துறைமுகத்தை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்துக்குப் பின்னர் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட ஆய்வுகளின்படி, கப்பலின் திசைக் கட்டுப்பாட்டு கருவியில் ஏற்பட்ட திடீர் கோளாறு மற்றும் ஆற்றில் காணப்பட்ட பலத்த நீரோட்டம் ஆகியவை விபத்துக்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

கப்பல் கரையை நோக்கி வேகமாகச் சென்றுகொண்டிருந்த நிலையில், மாலுமி தொடர்ச்சியாக எச்சரிக்கை ஒலியை எழுப்பியதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால் அருகிலிருந்த படகுத்துறையினர் மற்றும் பொதுமக்கள் நிலைமையை உணர்ந்து அங்கிருந்து விலகியதால், பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது.

விபத்துக்குள்ளான கப்பல் பின்னர் இழுவைப் படகுகளின் உதவியுடன் மீட்கப்பட்டதாகவும், தற்போது தனது பயணத்தை மீண்டும் தொடர்ந்துள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top