
இலங்கை போக்குவரத்து சபைக்கு (இ.போ.ச.) 600 புதிய பேருந்துகளை அறிமுகப்படுத்தும் அரசாங்கத்தின் திட்டத்திற்கு இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கை தனியார் பேருந்துத் துறையை மேலும் பாதிக்கும் என்றும், முறையான ஆய்வுகள் இன்றி பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது “தேசியக் குற்றம்” போன்றது என்றும் அந்தச் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன, இ.போ.ச.க்கு புதிய பேருந்துகளைப் பெற்றுக்கொடுப்பதற்கு தனியார் பேருந்து உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், வெறுமனே புதிய பேருந்துகளை இணைப்பதன் மூலம் அரச போக்குவரத்து சேவையின் நிதி மற்றும் செயற்பாட்டு சிக்கல்களைத் தீர்க்க முடியுமா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
பொதுப் போக்குவரத்து சேவையில் தனியார் பேருந்துகள் முக்கிய பங்களிப்பை வழங்கி வரும் நிலையில், சாத்தியக்கூறு மதிப்பீடுகள் இன்றி இ.போ.ச. பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இலங்கை போக்குவரத்து சபை நாளாந்தம் சுமார் 20 மில்லியன் ரூபாய் இழப்பை எதிர்கொள்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், புதிய பேருந்துகளை கொள்வனவு செய்வதை விட அரச போக்குவரத்து சேவையில் காணப்படும் செயல்திறன் குறைபாடுகளை சரிசெய்ய வேண்டும் என கெமுனு விஜேரத்ன வலியுறுத்தியுள்ளார்.
மேலும், அரச பேருந்து சேவை விரிவாக்கம் தொடர்பான விடயங்களில் சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து தமது சங்கம் ஆராய்ந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
