
2026 உலகக் கிண்ணக் கால்பந்து தொடரின் இறுதிப்போட்டிக்குப் பின்னர், ஆர்ஜென்டீனா அணித் தலைவர் லியோனல் மெஸ்ஸி முதன்முறையாக பொதுவெளியில் தோன்றியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஆர்ஜென்டீனாவின் ரொசாரியோ நகருக்கு அருகிலுள்ள அரோயோ செகோ (Arroyo Seco) பகுதியில் நடைபெற்ற ‘பிரைமேரா சி’ (Primera C) நான்காம் தர லீக் போட்டியொன்றை பார்வையிடுவதற்காகவே மெஸ்ஸி அங்கு சென்றுள்ளார்.
மெஸ்ஸியின் குடும்பத்தினரால் நிர்வகிக்கப்பட்டு வரும் லியோன்ஸ் எஃப்.சி (Leones FC) அணிக்கும் சென்ட்ரல் கோர்டோபா அணிக்கும் இடையிலான போட்டியை, அவர் மைதானத்தின் பார்வையாளர் அரங்கில் இருந்து நேரில் கண்டுகளித்துள்ளார்.
கறுப்பு நிற ஹூடி அணிந்து எளிமையாக போட்டியைப் பார்வையிட முயன்ற மெஸ்ஸியை ரசிகர்கள் அடையாளம் கண்டுகொண்டனர். இதையடுத்து, ரசிகர்கள் ஆரவாரத்துடன் அவரை வரவேற்ற நிலையில், மெஸ்ஸியும் புன்னகையுடன் கையசைத்து பதிலளித்தார்.
இந்தக் காட்சிகள் அடங்கிய காணொளிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றன.
