
மாலியில் நடைபெற்ற ஹஜ் பெருநாள் கொண்டாட்டங்களில் பங்கேற்று தாய்நாட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்த நைஜர் நாட்டுப் பிரஜைகளை ஏற்றிச் சென்ற பாரவூர்தியொன்று சஹாரா பாலைவனத்தில் பழுதடைந்ததைத் தொடர்ந்து, அதில் பயணித்த 49 பேர் தாகம் மற்றும் கடும் வெப்பத்தால் உயிரிழந்துள்ளனர்.
நைஜர்–அல்ஜீரியா எல்லையில் அமைந்துள்ள முக்கிய எல்லைக் கடவையான அசாமாகாவுக்கு மேற்கே சுமார் 80 கிலோமீற்றர் தொலைவில் இந்த துயரச் சம்பவம் இடம்பெற்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாரவூர்தி பழுதடைந்ததைத் தொடர்ந்து பயணிகள் பாலைவனத்தின் நடுவே சிக்கிக்கொண்ட நிலையில், கடும் வெப்பநிலை மற்றும் குடிநீர் பற்றாக்குறை காரணமாக பலர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்தில் இருவர் மட்டுமே உயிர் தப்பியதுடன், நீண்ட தூரம் நடந்து அசாமாகா எல்லைப் பகுதியை அடைந்து அதிகாரிகளுக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற மீட்புக் குழுவினர், உயிரிழந்தவர்களின் உடல்களை வாகனத்தின் கீழ் மற்றும் அதைச் சுற்றிய பகுதிகளில் இருந்து மீட்டுள்ளனர். கடுமையான சூழ்நிலை காரணமாக பலரின் உடல்கள் சம்பவ இடத்திலேயே பொதுக் கல்லறைகளில் அடக்கம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மீட்புப் பணியில் ஈடுபட்ட குழுவினர் அருகிலுள்ள பகுதியில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக மூன்று நாட்களாக சிக்கியிருந்த மற்றொரு வாகனத்தையும் கண்டுபிடித்துள்ளனர். அதில் இருந்த 60-க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு குடிநீர் வழங்கப்பட்டதுடன், வாகனம் பழுதுபார்க்கப்பட்டு அவர்கள் பாதுகாப்பாக பயணத்தைத் தொடர உதவியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் சஹாரா பாலைவனப் பகுதிகளில் பயணிக்கும் மக்களுக்கு நிலவும் அபாயங்களை மீண்டும் ஒருமுறை வெளிக்கொணர்ந்துள்ளது.
