
இந்திய ஆண்கள் இருபதுக்கு 20 (டி20) கிரிக்கெட் அணியின் புதிய தலைவராக ஸ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார். அஜித் அகர்கர் தலைமையிலான இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் (BCCI) தேர்வுக்குழு இன்று இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இந்த அறிவிப்பின்படி, அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெறவுள்ள டி20 தொடர்களிலும், 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான இந்திய அணியிலும் ஸ்ரேயாஸ் ஐயர் தலைவராக செயல்படுவார்.
மறுபுறம், அண்மையில் இந்தியாவுக்கு உலகக் கிண்ண வெற்றியை பெற்றுத் தந்த சூர்யகுமார் யாதவ் தலைவர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதுடன், டி20 அணியிலிருந்தும் விலக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக இளம் வீரர் திலக் வர்மா துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும், ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ் மற்றும் ரிங்கு சிங் உள்ளிட்ட முக்கிய வீரர்களும் அறிவிக்கப்பட்ட டி20 அணிகளில் இடம்பெறாதது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், வெறும் 15 வயதான அதிரடி துடுப்பாட்ட வீரர் வைபவ் சூர்யவன்ஷி இந்திய அணியில் இடம்பிடித்திருப்பது பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. அண்மையில் நடைபெற்ற ஐபிஎல் 2026 தொடரில் அதிக ஓட்டங்கள் குவித்து ஆரஞ்சு தொப்பி (Orange Cap) வென்றதுடன், தொடர் நாயகன் விருதையும் கைப்பற்றிய அவர், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள மூன்று முக்கிய டி20 குழாம்களிலும் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை இன்று ஒரே நாளில் நான்கு வெவ்வேறு சர்வதேச மற்றும் பல்நாட்டு தொடர்களுக்கான இந்திய அணிகளை அறிவித்துள்ளது. அதன்படி, அயர்லாந்துக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடர், இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் ஜப்பானில் நடைபெறவுள்ள 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான இந்திய அணிகள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த அணித் தேர்வு இந்திய டி20 கிரிக்கெட்டில் புதிய தலைமுறை மாற்றத்திற்கான தொடக்கமாக பார்க்கப்படுகிறது.
