நாடளாவிய ரீதியில் இதுவரை 237 பேருக்கு மூளைக்காய்ச்சல் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சுகாதாரத் துறையினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பதிவாகியுள்ள நோயாளர்களில் பெரும்பாலானோருக்கு வைரஸ் தொற்றினால் ஏற்படும் மூளைக்காய்ச்சல் இருப்பதாக நம்பப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பாதிக்கப்பட்டவர்களில் அதிகமானோர் பாடசாலை மாணவர்கள் என சுகாதார அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
தெனியாய, ரிகில்லகஸ்கட, கண்டி, பதுளை, வெலிமடை மற்றும் தியத்தலாவ ஆகிய பகுதிகளிலிருந்தே அதிகளவிலான நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று (31) வரையிலான நிலவரப்படி, மூளைக்காய்ச்சல் அறிகுறிகளுடன் 59 பேர் தொடர்ந்தும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதேவேளை, ஏனைய நோயாளர்கள் சிகிச்சையின் பின்னர் முழுமையாக குணமடைந்து மருத்துவமனைகளிலிருந்து வெளியேறியுள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
