மக்கள் நீண்டகாலமாக எதிர்நோக்கும் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணும் நோக்கில், 2027ஆம் ஆண்டுக்கான வரவு–செலவுத் திட்டத்தில் விசேட நிதி மற்றும் முன்னுரிமை ஒதுக்கப்படும் என ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பு, வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர்வழங்கல் அமைச்சின் 2026ஆம் ஆண்டுக்கான திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் 2027ஆம் ஆண்டுக்கான நிதித் தேவைகள் தொடர்பாக இன்று (08) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற உயர்மட்ட கலந்துரையாடலின் போது வெளியிடப்பட்டது.
கலந்துரையாடலில், நாட்டின் பல பகுதிகளில் நிலவும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்கான புதிய திட்டங்களை விரைவாக முன்னெடுத்து, அவற்றுக்கு தேவையான நிதி ஒதுக்கீட்டை உறுதிப்படுத்துவதன் அவசியத்தை ஜனாதிபதி வலியுறுத்தினார்.
அத்துடன், யுத்தத்தால் இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றப் பணிகளை மேலும் துரிதப்படுத்துமாறும், குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களின் பகுதியளவில் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளை பூர்த்தி செய்ய வீட்டுவசதி உதவித் திட்டம் ஒன்றை விரைவில் நடைமுறைப்படுத்துமாறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தினார்.
இந்த நடவடிக்கைகள் மக்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதோடு, பாதுகாப்பான குடிநீர் மற்றும் நிலையான வீடமைப்பை உறுதிப்படுத்தும் அரசின் முன்னுரிமைத் திட்டங்களாக அமையும் என தெரிவிக்கப்பட்டது.
