
இலங்கையர்களை இலக்கு வைத்து நடைபெற்று வரும் புதிய வகை WhatsApp காணொளி மோசடி குறித்து இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழு (SL CERT) எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த மோசடி இந்தியாவில் இருந்து இயக்கப்படுவதாக சந்தேகிக்கப்படுவதுடன், அண்மைக் காலங்களில் இதுகுறித்து பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோசடிக்காரர்கள் கவர்ச்சிகரமான இளம் பெண்களின் போலி Facebook கணக்குகள் மூலம் முதலில் தொடர்பு கொண்டு, பின்னர் உரையாடலை WhatsApp செயலிக்கு மாற்றுகின்றனர். அதன் பின், அவர்கள் காணொளி அழைப்புகளை ஏற்படுத்துகின்றனர்.
அழைப்பின்போது நிர்வாணமான தோற்றத்தை உருவாக்கி, அதனை பதிவு செய்து அல்லது போலியான ஆபாச காணொளிகளை உருவாக்கி, பாதிக்கப்பட்டவரின் சமூக வலைத்தள தொடர்புகளுக்கு பகிர்வதாக மிரட்டி பணம் பறிக்கின்றனர்.
மேலும், இந்த குழு இந்திய வங்கிக் கணக்குகளுக்கு பணம் அனுப்புமாறு அழுத்தம் கொடுத்து மிரட்டுகின்றது.
அறிமுகமில்லாத நபர்களுடன் சமூக வலைத்தளங்களில் தொடர்பு கொள்ளும் போது அதிக அவதானத்துடன் இருக்குமாறு அதிகாரிகள் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர். சமூகத்தில் முக்கிய நபர்களும் இந்த மோசடியில் சிக்கியுள்ளமை குறிப்பிடப்பட்டுள்ளது.
இத்தகைய சம்பவங்கள் இடம்பெற்றால் உடனடியாக அருகிலுள்ள காவல் நிலையத்திற்கும், சைபர் பாதுகாப்பு பிரிவினருக்கும் தகவல் வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
