
அரச வெசாக் பௌர்ணமி பண்டிகையை முன்னிட்டு, பாடசாலைகள், கல்வியியற் கல்லூரிகள், பிரிவெனாக்கள் மற்றும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் நடத்தப்பட வேண்டிய நிகழ்ச்சிகள் தொடர்பான சுற்றுநிரூபத்தை கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.
அதன்படி, மே 26 முதல் ஜூன் 02 வரை காலப்பகுதி “வெசாக் வாரம்” என பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வாரத்தில் பொருத்தமான ஆன்மீக மற்றும் பண்பாட்டு நிகழ்ச்சிகளை ஒழுங்கமைக்குமாறு கல்வி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ, ஒவ்வொரு நிறுவனமும் தங்களது சூழ்நிலைக்கு ஏற்ப இந்த நிகழ்ச்சிகளை செயல்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.
2026 மே 30 ஆம் திகதி இடம்பெறவுள்ள வெசாக் தினத்தை முன்னிட்டு, அரச வெசாக் விழா மே 27 ஆம் திகதி மாத்தறை, திஹகொட மிடெல்லவல புராதன விகாரையில் நடைபெற உள்ளது.
இந்த விழாவை புத்தசாசன, மத மற்றும் கலாசார விவகார அமைச்சும் பௌத்த விவகார திணைக்களமும் இணைந்து ஏற்பாடு செய்கின்றன.
மேலும், நிகழ்ச்சிகளை எவ்வாறு திட்டமிட்டு நடைமுறைப்படுத்துவது தொடர்பான வழிகாட்டுதல்கள் மற்றும் மாதிரி திட்டமும் அமைச்சு வெளியிட்டுள்ளது.
